Friday, November 28, 2008

சொட்டுநீர் பாசனம் - விவசாயியின் அனுபவம

விவசாயிகள் சொட்டுநீர் பாசனத்தை தாங்களாகவே அமைத்துக்கொள்ளலாம். முதலில் சொட்டுநீர் பாசனம் அமைந்துள்ள நிலங்களுக்குச் சென்று பார்த்து, அமைத்துள்ளவர்களிடம் பேசி விபரம் அறிந்துகொள்ளவும். பொதுவாக மின்சார மோட்டார் பொருத்தியுள்ள கிணற்றிலிருந்து வெளிவரும் டெலிவரி பைப்பில் தொட்டியில் தண்ணீர் விழுமிடத்தில் ஒரு கேட் வால்வு அமைத்து தண்ணீரை சொட்டு நீர் பைப்புகளுக்கு போகும்படி செய்துகொள்ளலாம். சிலர் தனியாக பெரிய தொட்டி கட்டி அதில் தண்ணீர் நிரப்பி அதை சொட்டுநீர் பைப்புகள் வழியாக சொட்டுநீர் செலுத்துகிறார்கள். இது அவசியமில்லை. போர்வெல் டெலிவரியையும் நேரடியாக சொட்டுநீர் குழாய்களுக்கு செலுத்தலாம். சொட்டுநீர் பைப்புகளின் ஆரம்பத்தில் ஒரு கேட் வால்வு அமைத்துக்கொள்ளவும். இரண்டு அங்குல பிவிசி பைப்புகள், பின்பு ஒன்றரை அங்குல பைப்புகள் அமைத்து அதிலிருந்து 12 மிமீ டியூப் வழியாக மரத்திற்கு ஒரு 12 எம்எம் பிவிசி டேப் பொருத்தவேண்டும்.



அப்போதுதான் எல்லா மரங்களுக்கும் தேவையான அளவு தண்ணீர் செலுத்த முடியும். பொதுவாக சொட்டுநீர் பைப்புகள் மற்றும் வால்வுகள் விற்கும் கடைக்காரர் இவற்றை எப்படி அமைத்துக்கொள்வது என்பதையும், அதற்கு தேவையான பொருள்களையும் கருவிகளையும் தந்து உதவி செய்கிறார். பூமியில் ஒன்றை அடி ஆழத்தில் நீளமாக குழி எடுத்து அதில் 2 அங்குல பிவிசி பைப்புகளை அமைத்து மூடிவிட வேண்டும். ஒவ்வொரு தென்னை மர வரிசைக்கும் ஒரு 12 எம்எம் பிவிசி டியூப்-ஐ பொருத்தவும். மரத்தின் அருகில் சிறு 12 எம்எம் டேப் பொருத்திக்கொள்ள வேண்டும். 5 முதல் 7 மரங்களுக்கு ஒரு 12 எம்எம் பிவிசி டேப் கனெக்ஷன் எடுக்க வேண்டும். 12 எம்எம் டியூப்களை தரை மேலேயே போட்டு தண்ணீர் பாய்ச்சலாம். உழும்பொழுது அவற்றை சுற்றி நடுவில் வைத்துவிட்டு உழவும்.


பராமரிப்பு: அவ்வப்போது எல்லா மரங்களுக்கும் தேவையான தண்ணீர் கிடைக்கிறதா என பார்த்துக்கொள்ள வேண்டும்.
சொட்டுநீர் பாசனத்தின் மிகப்பெரிய சவுகரியம் என்னவென்றால் கிணற்றில் தண்ணீரும் கரண்ட் சப்ளையும் இருக்கும் போதெல்லாம் தென்னைக்கு தண்ணீர் விடலாம். தற்போது என் கிணற்றில் போதிய தண்ணீர் இருப்பதால் பகலில் 6 மணி நேரமும் (6-12 அல்லது 12-6 மணிவரை) இரவில் 8 மணி நேரமும் (10-6 மணி) தொடர்ந்து சொட்டுநீர் பாய்ச்சுகிறேன். யாரும் இரவில் விழித்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் மோட்டாரின் ஸ்டார்டர் கண்டிஷனாக இருக்க வேண்டும். கரண்ட் கட்டானாலோ, ஒரு பீஸ் போனாலோ ஸ்டார்டர் இறங்கி மோட்டார் தானாக ஆப் ஆகிவிட வேண்டும்.



தோட்டத்தில் உள்ள பண்ணையாளே இதை கவனித்துக்கொள்ளலாம். ஐந்து ஏக்கர் சொட்டுநீர் பாசன தென்னந்தோப்பை பராமரிக்க ஒரே ஒரு ஆள் போதும். மரங்களைச் சுற்றி களை எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். மரக்கன்றுகளுக்கு உரமிடுதல்: கீழ்கண்ட இயற்கை உரங்களை (பயோ பெர்டிலைசர்ஸ்) நன்கு கலந்து கன்றுகளுக்கு ஒரு கையளவு வேர் அருகில் வைத்து மண்ணைப் போட்டு மூடி தண்ணீர் விட வேண்டும்.


1. வெர்மி கம்போஸ்ட் - 10 கிலோ - ரூ.80/-, 2. வேம் -1 கிலோ ரூ.80/-, 3. ஆசோகிரீன்-1கிலோ - ரூ.50/-. இவைகளை மூன்று மாதங்களுக்கு, மாதம் ஒரு முறை வைத்தால் கன்றுகள் சீக்கிரம் வேறூன்றுவதுடன் நன்கு வளர்ந்துவிடும். அதன்பின் 6 மாதங்களுக்கு பயோ பெர்டிலைசர் 3 மாதங்களுக்கு ஒரு முறை இடவும். ஆறு மாதங்களுக்குப் பின் எந்த உரமும் அவசியமில்லை. இயற்கையாகவே மரங்கள் நன்கு வளர்ந்துவிடும். தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இல்லை. மழை நீரிலேயே மரங்கள் செழித்து வளரும்.


தேக்கு நாற்றுகள் தயாரித்தல்: என் தோட்டத்தில் உள்ள பொழிகாலில் 15 ஆண்டுகள் வளர்ந்த தேக்கு மரங்களை வெட்டி விற்ற பின் வேரிலிருந்து சிம்புகள் தழைத்து வருகின்றன. அந்த தேக்கு சிம்புகளை கணுவிற்கு ஒன்றாக வெட்டி கணுவில் உள்ள முளை மேல் நோக்கியவாறு ஊன்றியுள்ளேன். தற்போது அவை இலை விட்டு முளைத்துவருகின்றன. ஆக, தென்னந்தோப்பு வேலிகளில் தேக்கு, சவுக்கு ஆகியவைகளை நட்டுவளர்த்தால் நமக்கு வருமானம் கிடைப்பதுடன் எல்லோருக்கும் பயனளிக்குமாறு நல்ல காற்றும் மழையும் கிடைக்கும்.


-விங் கமாண்டர் எம்.எல்.ரங்கராஜன் (ஓய்வு)
1333, தடாகம் ரோடு,
ஆர்.எஸ்.புரம், கோயம்புத்தூர்-641 002.

நன்றி தினகரன்..

No comments: