Friday, November 28, 2008

உயிரி பொருட்களிலிருந்து எரிசாராயம் உற்பத்தி:

நவீன தொழில்நுட்பம்

உயிரி பொருட்களிலிருந்து எரிசாராயம் உற்பத்தி:

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் எரிசாராயத்தில் பெருமளவு சர்க்கரை ஆலைகளிலிருந்து பெறப்படும் ஆலைக்கழிவு மூலம் தயாரிக்கப்படுகிறது.

எரிசாராயத்தை பொதுவாக 3 வகையான பயிர்களிலிருந்து உற்பத்தி செய்யலாம். ஒன்று இனிப்புசத்து கொண்ட கரும்பு, சர்க்கரைச்சோளம், வெப்ப மண்டல சர்க்கரை கிழங்கு போன்றவை.  

இப்பயிர்களின் சாற்றினை அரைப்பான்கள் கொண்டு பிழிந்து அவை இயந்திரம் மூலம் சர்க்கரைச்சாறு பிரித்தெடுக்கப்பட்டு "ஈஸ்ட்' என்ற நுண்ணுயிரியினைக் கலந்து நொதிப்பான்களில் நொதித்தல் முறையில் எரிசாராயம் உற்பத்தி செய்யப்படுகிறது. பெரும்பாலான சர்க்கரை ஆலைகள் சர்க்கரை உற்பத்தியின்போது பெறப்படும் மொலாசஸ் எனப்படும் சர்க்கரை பாவு கழிவு கொண்டு எரிசாராயத்தினை உற்பத்தி செய்கின்றன.

சுமார் 240 லிட்டர் எரிசாராயத்தை ஒரு டன் சர்க்கரைப்பாகு கழிவிலிருந்து பெறலாம் எனவும், 3010 லிட்டர் எரிசாராயத்தினை ஒரு எக்டர் இனிப்பு சோளத்திலிருந்து பெறலாம் எனவும், சுமார் 2500-3000 லிட்டர் எரிசாராயத்தை ஒரு எக்டர் வெப்ப மண்டல சர்க்கரைக் கிழங்கிலிருந்து பெறலாம் எனவும் பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் கணக்கிடப்பட்டுள்ளது. எரிசாராயம் உற்பத்தி செய்ய பல்வேறு மாவுப்பொருட்கள் பல்வேறு நாடுகளில் உபயோகப்படுத்தப்படுகிறது.

சோளம், உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு போன்ற பல்வேறு பயிர்களையும் எரிசாராயம் உற்பத்தி செய்ய உபயோகிக்கலாம். கூட்டு சர்க்கரைப் பொருள்களைக் கொண்டுள்ள மாவுப் பொருட்கள் முதலில் வெப்பம் கொண்டு தனி சர்க்க ரைப் பொருட்களாக மாற்றப்படுகின்றன.

பின்னர் நொதிகள் மூலம் மேலும் சர்க்கரையாக மாற்றப்படுகிறது. பின்னர் நொதித்தல் முறையில் ஈஸ்ட் கொண்டு எரிசாராயமாக மாற்றப்படுகிறது. 370 லி. எரிசாராயம் ஒரு டன் சோளத்திலிருந்தும், 90-100 லி. எரிசாராயம் 1 டன் உருளைக்கிழங்கிலிருந் தும் பெறப்படுகிறது.

மற்றுமொரு முறையில் பல்வேறு வகைப் பயிர் மற்றும் காடுகளின் கழிவுப் பொருட்களிலிருந்து உயிர் பொருட்களை நன்கு அரைத்து சிறு துகள்களாக மாற்றி அமில மற்றும் கார கரைசலில் கரைத்து நீர்மம் ஆக மாற்றப்பட்டு, நன்கு வினையேற்றம் செய்ய பல்வேறு நொதிகள் உபயோகிக்கப்பட்டு சர்க்கரைச்சத்து வெளியேற்றப்படுகிறது. இம்முறை மிகவும் கடினமானதாகவும் அதிக அளவில் சக்தியினை செலவு செய்வதாலும் இதனை உபயோகிப்பது மிகவும் கடினமானதாக உள்ளது. 

 எனினும் அதிக அளவில் எரிசாராயம் தேவைப்படுவதால் வரும் காலங்களில் இம்முறைகளில் எரிசாராயம் உற்பத்தி செய்வதற்கு பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. குறிப் பாக நெல் வைக்கோல், கோதுமை வைக்கோல், பண்ணை கழிவுகள், கரும்பு சக்கை போன்ற உயிர்ப்பொருட்களிலிருந்து எரிசாராயம் உற்பத்தி செய்ய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன. எரிசாராயத்தை சிறந்த எரிபொருளாக இயந்திரங்கள் மற்றும் கார், டிராக்டர் போன்ற வாகனங்களுக்கும் உபயோகிக்க இயலும்.  

எரிசாராயம் 130 டிகிரி செல்சியஸ் எரிநிலையும், 423 டிகிரி செல்சியசில் தீப்பற்றும் வெப்ப நிலையையும் கொண்டுள்ளதால் இதனை சிறந்த எரிபொருளாக உபயோகிக்க இயலும். மேலும் பெட்ரோலிய பொருட்களுக்கு சிறந்த மாற்று எரிபொருளாக எரிசாராயம் திகழ்வதால் இதன் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. (தகவல்: நெ.உ.கோபால்,ப.வெங்கடா சலம், உயிர் சக்தி துறை வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003. போன்: 0422-661 1276)

-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

நன்றி தினகரன்...

No comments: